20241024 உழவாரப்பணி தமிழ்நாட்டில் திருப்புகலூரில் கருந்தார்குழலி உடனுறை அக்னிபுரீசுவரர் கோவிலில் பெங்களூரு அடியார்கள்
26/10/24
அக்டோபர் மாதத்தின் உழவாரப்பணி தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருப்புகலூரில் உள்ள கருந்தார்குழலி உடனுறை அக்னிபுரீசுவரர் கோவிலில் எங்களின் ஆண்ட அரசு உழவாரப்பணிக்குழு சார்பில் அக்டோபர் 26 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவிலின் மேப் கீழே
https://g.co/kgs/xoZcdsM
உள்ளூர், பெங்களூரின் வெளியே என இருந்த எங்களின் உழவாரப்பணி இம்முறை நம் தமிழ்நாட்டில் அதுவும் மூவரால் பாடப்பெற்ற தலத்தில் நிகழ்கிறது என்றால் எங்களின் சந்தோஷத்திற்கு அந்த வானமே எல்லை.
ஒன்றரை
நாள் எங்க அடியார்களுடன் இருக்கப்போகின்றோம், நம்முடைய சிந்தனைகள் பெருமானைப் பற்றியே இருக்கும், அங்கே போய் உழவாரப்பணி இதை விட பெரிய்ய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்.
நாம போய்விட்டு வருகிற வரை வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான
எல்லாவற்றையும் செய்து வைத்துவிட்டால் நாமும் நிம்மதியா போய்விட்டு வரலாம்ன்னு சும்மா
ஜெட் வேகத்தில் வேலையை முடித்தோம். இதோ கிளம்பியாச்சு.
இந்த முறை அடியார்களுக்காகச் செய்தது ஜவ்வரிசி உப்புமா மற்றும்
பொருள் விளங்கா உருண்டை. பொதுவா இந்த உருண்டை செய்யறப்போ எனக்கு ஒரு முறை நன்றாக வந்தால்
மறு முறை உதிர்ந்து போகும், ஆனால் இம்முறை அடியார்களுக்காகச் செய்ததாலேயே ஒரு உருண்டை கூட பிரிந்து
போகலை, அது தான் பெருமானின் கருணை, அவரை நினைத்து அடியார்களுக்காகச் செய்யும் பொழுது
அதை எப்பொழுதும் சிறப்பாக்கித் தருவது அவன்
செயல்.
பஸ்ஸில் எப்பொழுதும்
போல் திருவாசகம் தொடர்ந்தது. திருப்புகலூரின் பெருமைகளைத் தெரிந்து கொண்டு, எப்பேர்பட்ட
தலத்திற்குச் செல்கிறோம்,என்ற பிரமிப்புடன் சென்றோம்.
முருகவேள் ஐயா திருப்புகலூர் பதிக பெருமைகளைப் பற்றிச் சொல்ல
ஆரம்பித்தார்கள்.
ஒருவர் இறந்த வீட்டிற்குச் சென்று அவர் எப்படி இறந்தார்ன்னு
விசாரிக்கும் பொழுது அவர் கடைசியா என்ன சொன்னார்ன்னு கேட்போமுல்ல? என்றார் (அப்பொழுது
தான் அப்படிக் கேட்கணும் போல என்றே தெரிந்தது)
அப்படி அப்பர் பெருமான் இறுதியாக என்ன சொன்னார்? என்று கேட்டால்
இந்தப் பதிகத்தைச் சொல்லலாம் என்று ஐயா கூறினார்.
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ என்ற பதிகத்தைப் பற்றிச் சொன்னார்.
நான் முதன் முதலில் இந்தப் பதிகத்தைப் பற்றி இப்பொழுது தான்
கேள்விப்படுகிறேன். அதில் மூன்றாவது வரி
"ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர
மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே
" என்று பாடல் முடிகிறது.
அதாவது இறக்கும் தருவாயில் ஒன்பது வாயில்களும் அடைக்கும்,
அப்போ உன்னைப் போய் கும்பிட முடியுமா? தெரியாதே இப்போ நல்லாயிருக்கேன் இப்பொழுதே உன்
திருவடியை வணக்கிக் கொள்கின்றேன்னு அப்பர் உருகுகிறார்
இது நமக்காக அவர் சொன்னது. தனிமையா உட்கார்ந்து யோசிக்கும்
பொழுது எவ்வளவு அர்த்தங்கள் உள்ள பதிகம் ன்னு பிரமிக்க வைக்கின்றது.
அடுத்து வேறு ஒருவர் ஐயாவிடம் எனக்கு கொஞ்சம் கஷ்டம் அது
தீர ஏதாவது வழியிருந்தா சொல்லுங்கன்னு கேட்டதுக்கு ஐயா சொன்ன பதில் இந்த எண்ணுகேன்
பதிகம் படிங்க என்றாராம்.
ஏன் அதில் அப்படி என்ன சிறப்புன்னு நாங்க கேட்காமலேயே எங்களது
மைன்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டு ஐயாவே சொன்னார்.
நான்காவது பாடல்
ல
"தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச் என்ற பாடலில் மூன்றாவது
வரி
"வாட்டந்தீர்ப்பாய், மருந்தாய்ப் பிணி தீர்ப்பாய்"ன்னு
வரும்
என்ன அழகான வரி பாருங்கள் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய்,
பிணி தீர்ப்பாய்
என் கஷ்டத்தைப் போக்குகிறவன் நீ எனக்கு மருந்தும் நீ தான்,
என் இந்தப் பிணி மற்றும் பிறவிப் பிணியையும் நீக்குகிறவன் நீயல்லவோ? ன்னு அப்பர் பெருமான்
உருகிறார்.
கூற்றாயினவாறு பதிகத்திலும் சொல்லப் பா பயப்படாதே நான் இருக்கேன்னு
ஒரு வார்த்தை சொல்லு போதும்பார், பிறகு எனக்கு வினை நிறைய இருக்கு அதை மறைச்சு டேன்னு
கேட்ப்பார் அது போல இந்தப் பதிகத்திலும் இறைவன்
நம் வாட்டத்தைப் போக்கி, நமக்கு மருந்தாகி, நம் பிணியையும்
தீர்பார் இறைவன் என அப்பர் பெருமான் சொல்கிறார்.
நிறைய கஷ்டப்பட்டவர் அப்பர், அப்படிக் கஷ்டப்பட்டு, இறைவனை
உணர்ந்து கைலாசக் காட்சி கண்ட அப்பர் சொன்னால் அது சரியாகத் தானே இருக்கும், அதனால்
நாமும் நம் துன்பங்கள் தீர, பிணி அகல, உடல் நலம் தேற இந்தப் பதிகத்தைப் படிப்போம் ன்னு
முருகவேள் ஐயா ரொம்ப அழகா நிறைய எடுத்துக் காட்டுகளோடு சொன்னார். முத்தான கருத்துக்களை
தரும் முருகவேள் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றி கூறி விட்டு அடுத்த பதிகம் சென்றோம். உழவாரப்
பணி வரும் பொழுது தான் இவ்வாறான கருத்துக்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
வழியில் ஒரு இடத்தில் இரவு உணவை முடித்தோம். பஸ் திருச்சியை
நோக்கிச் சென்று கொண்டுயிருந்தது. விடிந்தும், விடியாத ஒரு இரவு, அடியார்களுடனான பஸ்
பயணம், புதுமையான அனுபவமாகயிருந்தது.
ஒரு மணி இருக்கும் டீ குடிக்க வேண்டும் போல் இருந்தது, பார்த்தா
பஸ் டீக்கடை கிட்ட நின்றது. நம்ம மைன்ட் வாய்ஸ் முருகன் ஐயாவிற்கு கேட்டுடுச்சான்னு
நினைச்சுகிட்டே கீழே இறங்கினோம்.
டீ வேணும்ன்னு நினைக்கறப்போ இறைவன் டீ தருகிறாரேன்னு அவர் கருணை இது என நினைத்து இறங்கி நைட் ஒரு மணிக்கு சுடச்
சுட டீ அடியார்களுடன் பேசிட்டே குடித்தாகி விட்டது.
இதெல்லாம் எப்பவாவது கிடைக்கும். கிடைக்கும் பொழுது அனுபவித்து
உள்ளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
பஸ் டிரைவர் அருமையாக ஓட்டிக் கொண்டு வந்தார்.
பஸ் திருவாரூர் நோக்கிச் சென்றது. ஆஹா திருவாரூர் கோவில்
கோபுரம் தெரிந்தது.
ஆரூரா , ஐயாறா, ஐயாறா, ஆரூரா ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர்ஆர் திருவையாறா போற்றின்னு அடியார்கள் அனைவரும் தலைமேல்
கைவைத்து இறைவனைத் தொழுது நாமங்கள் சொல்ல பஸ் திருவாரூர் கோவில் பக்கமாகவே சென்றது.
கமலாலயக் குளத்தைப் பார்த்துக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது.
எப்பேர்பட்ட பெருமான், எப்பேர்பட்ட கோவில் இந்த ஊரின் மண்ணை
மிதிப்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டுமே
அப்பா பெருமானே எங்கள் மேல் உனக்கு என்ன கருணை, எங்களை அழைத்திருக்கிறாயே,
என்ற எண்ணத்துடனே அனைவரும் இறங்கினோம்.
பஸ் சற்றே தள்ளி நின்றது. இறங்கியவுடன் பிள்ளையார் கோவிலில்
பிள்ளையார் தரிசனம் தந்தார். உள்ளே சற்றே அந்த அதிகாலைக் குளிரில் நடந்து சென்றோம்.
நாங்கள் நடந்து சென்ற இடம் ஆரூர் திரு அழுதுக் கூடம்.
நமக்குத் தெரிந்ததெல்லாம் காலையில் எழுவது காபி குடிப்பது,
சமைப்பது, அலுவலகம் போவது, பிள்ளை குட்டிகளைப் பேணுவது, 6ம் விரலாகிப் போன போனில் ரீஸ்ஸ் பார்பது திரும்ப சாப்பிடுவது, தூங்குவது
மறுபடியும் மறுநாள் காபின்னு ஆரம்பிப்போம்,ஆனால் இதையெல்லாம் தாண்டிய ஒரு உலகம் இருக்கிறது
அது என்ன? எப்படிப் பட்டது அடுத்த பகுதியில் பார்ப்போம்.
பாகம் 2:
உள்ளே நுழையும் போதே நமச்சிவாய வாழ்க என்ற எழுத்துடன் வரவேற்றது
அந்தத் அரூரர் திருஅழுதுக் கூடம். தமிழை இப்படிப் பெரிய எழுத்தில் பார்ப்பது, என்பது
அலாதியாக இருந்தது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழாக இருந்தது எங்களைப் போன்ற பெங்களூர் வாசிகளுக்கு மிகப் பெரிய சந்தோஷம்,
ஏனெனில் நமக்கு அதைப் படிக்கத் தெரியும்.
உள்ளே நுழையும் பொழுது பலகையில் தெரிந்தது தயவு செய்து யாரும்
இங்கு பணிபுரிபவர்களுக்கு பணம் தர வேண்டாம் என்று எழுதியிருந்தது. ஒற்றைச் சொல்லில்
அவர்களின் தொண்டுள்ளம் தெரிந்தது.
நடந்து மேலே சென்றோம், மிகப்பெரிய ஹால் கிட்டத்தட்ட 50 அடியார்களுக்கு
மேல் ஓய்வெடுக்கலாம். எங்கு நோக்கினும் சிவச் சிந்தனைகள் தான்.
மனிதர்களுக்கு தான் சாப்பிடணும், தன் குடும்பம் சாப்பிடணும்
அதைத் தாண்டி அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்கணும் இது தானே பொதுவான மனநிலையாக இருக்கும்,
நாம் மட்டும் இதில் விதிவிலக்கா என்ன?ஆனால் ஒருவருக்கு அடியார்கள் வந்தால் தங்குவதற்கு,
இளைப்பாறுவதற்கு, உணவு அருத்த ஒரு இடம் என எல்லா வசதிகளுடனும் வேண்டும் எனத் தோன்றி
அதை எந்தப் பிரதிபலனும் பாராமல் மக்கள் சேவையே மகேசன் சேவை, அடியார்கள் மூலம் ஆண்டவனை
அடையலாம் என்ற வாக்கிற்கு உண்மை சேர்பதைப்போல இந்த ஆரூரர் திருஅமுதுக் கூடம் கட்டப்பட்டுள்ளது.
பார்த்துப் பார்த்து கட்டியிருக்காங்க போன் சார்ஜ் போட அம்பூட்டு
சார்ஜ் பாயின்ட். பெரிய்ய ஹாலில் அவ்வளவு Fan கள், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
அழகான கட்டளைகள், எப்படி இருக்கக் கூடாது என்பதைப்
பற்றியும், போர்டில் அழகாக எழுதியுள்ளார்கள்.
சிவனடியார்கள் சிவச்சின்னம் தரித்திருக்க வேண்டும் என்று
அழகான வாசகங்களில் எழுதிப் போட்டுயிருக்கிறார்கள்.
பஸ்ஸில் வந்த களைப்புத் தீர கால்களை நீட்டி உட்கார்ந்தோம்,
மிகச் சுத்தமான கழிவறைகள் என பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள்.
நித்ய பூஜை செய்யும் சிவனடியார்கள் உட்கார்ந்து பூஜை செய்ய
சுற்றி இடம் என மிகப் பிரமாதமாக இருந்தது.
அடியார்கள் தங்கள் தங்கள் பெருமானை வைத்து மிக அழகாக பூஜை
செய்தார்கள். ஒரே இடத்தில் எல்லோர் பெருமான்களையும் பார்ப்பது என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
கீழே ஒரு பெரிய ட்ரம் நிறைய டீ இருந்தது. அடியார்கள் வர வர
குடித்துக் கொள்ளலாம்.
நான்கு மாடிகள் உள்ளது போல, அனைத்தும் மிக நேர்தியாய் பரமரிக்கப்
படுகின்றது. ஒரு 4 பேர் இருக்கும் வீட்டை பராமரிப்பதே எவ்ளோ சிரமம் 100க்கணக்கான அடியார்கள்
வந்து போகிற இடம் என்றால் எவ்வளவு வேலைகள் இருக்கும் என வியந்து போனோம்.
அப்படியே வெளியே வந்து பார்த்தால் அப்பர், சுந்தரர், சம்பந்தர்,
மாணிக்கவாசகர் என நால்வரும் நடுவில் பெருமான் அம்மையுடன் சும்மா ஜம்ன்னு அமர்ந்திருப்பதைப் போன்ற சுதைச் சிற்பம்
இருந்தது.
நாம் கீழிருந்து
அவர்களை பார்க்கத் தவறினாலும் அவர்கள் மேலிருந்து நம்மை பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
போகும் பொழுதே உங்களுக்கு வாய்ப்பிருந்தால் நீங்கள் ஜெயராம்
ஐயாவைப் பார்க்கலாம் என்றார்கள். அவரைப் பார்ப்பதற்காகவே வந்தேன் என்றார்கள் சிலர்.
அவரிடம் ஆசிர்வாதம் வாங்கவே மகளை அழைத்து வந்தார்களாம். இவரைப்
பார்த்தால் நாயன்மாக்களைப் பார்த்த புண்ணியம் என்றார்கள். நாயன்மார்களை நாம் பார்த்ததில்லை,
இவரைப் பாருங்கள் அவரைப் பார்த்த பலன் கிடைக்கும் என்றார்கள்.
ஒரு அடியார் ஒருவரைப் பற்றிக் கூறினால் சரி, ஆனால் அனைத்து
அடியார்களுமே ஜெயராம் ஐயாவைப் பற்றியே சொல்கிறார்களே? யார் அந்த ஐயா? நமக்கு தரிசனம்
கிடைக்குமா? பார்க்க முடியுமான்னு நினைத்துக் கொண்டே உள்ளே போனோம். இறைவனின் கருணை
இருந்தால் நடக்கும் என்கின்ற எண்ணம் மட்டும் இருந்தது.
பிறகு திருவாரூர் கோவில் பார்த்து வரப் புறப்பட்டோம். அடியார்களுடன்
கோவில் போகும் பொழுது நாம் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் கிடைக்கும். பெருமானின்
பெருமையும், கருணையும் கடலைவிடப் பெரிதல்லவா அடியார்கள் அனுபவித்துச் சொல்லும் பொழுது
அந்த அனுபவமே தனிதான்.
திருவாரூர் அல்லவா, முதலில் அடியார்களை வணங்கி விட்டுத் தான்
ஆண்டவனை வணங்கவே போகிறார்கள்.
மாற்றுறைத்த விநாயகர்
கதையை கோ. சரவணன் ஐயா வாயிலாகக் தெரிந்து கொண்டோம்.
திருவாரூர் பெருமைகளை எல்லாம் எழுத இந்தப் பக்கங்கள் போதுமா?
என்ன? எங்கு திரும்பினாலும் பெருமான் தான். எப்படி யோசித்து எப்படிக்கட்டினாங்களோ.
விரிந்த கண் மூடுவதற்குள் அடுத்த பெருமானைப் பார்த்து கண்கள் விரிந்தது.
திருவாரூரில் அடியார்கள் தான் முதலில் பின்பு தான் ஆண்டவன்.
அதை சுரேஷ் ஐயா அழகாச் சொன்னாங்க.
மாடு, கன்றுக்குட்டி
இரண்டும் நடந்து போகுதுன்னு வைங்க, மாட்டைப் பிடிக்கணுமா? நீங்க அது சற்றுக் கடினம்
ஆகவே கன்றுக்குட்டியைப் பிடி மாடு தானா வரும் அதுபோல அடியார்களுக்குத் தொண்டு செய்
போதும், ஆண்டவன் தானா வருவான் என்றார். எவ்ளோ எளிமையான விளக்கம்.
எம்மையும் ஆள்வீரோ கேளீர் எனச் சுந்தரரும், தொண்டருக்குத்
தொண்டராம் புண்ணியம் என அப்பரும் எந்தை யென்னை ஏன்று கொளும் கொலோ என சம்பந்தரும் பாடியுள்ளார்கள்
எனில் திருவாரூரின் அடியாரின் பெருமை இதிலிருந்து விளங்கும்.
அடியார் திருவடியைப் பிடித்தால் ஆண்டவன் வருவார், ஏன் அடியாரை
வணங்க வேண்டும் என்றால் அந்த அடியாரின் கோலம் நமக்கு சிவத்தை நினைவு படுத்துகிறது.
அடியார் அணியும் திருநீறு சிவம், ருத்திராட்சம் சிவம், அடியாரின் கோலமே நமக்கு நம்
பெருமானை நினைவுபடுத்தும்.
ஒரு நல்ல அடியாரின் பேச்சைக் கேளுங்களேன் அது நம் மனதுக்கு
இதுமாக இருக்கும், இன்னும் சில சமயம் கேட்க மாட்டோமா எனத் தோன்றும்.
இப்படி அடியாரின் பெருமையும் ஆண்டவன் பெருமையும் கேட்டுக்
கொண்டே தியாகராஜரையும், கமலாம்பாளையும் தரிசித்து விட்டு வந்ததில் ஒரு மணி நேரம் ஒரு
நிமிடமாகிப் போனது.
திருவாரூர் செல்பவர்கள் காலை 6 மணிக்கு கோவிலுக்குச் செல்லுங்கள்
மதியம் 12 மணிக்கு திரும்பலாம். அவ்வளவு நேரம் வேண்டும் நாம் பார்க்க, தெரிந்து கொள்ள
ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றது.
ஆரூரர் திரு அழுதுக் கூடத்தில் அருமையான சிற்றுண்டி, அடியார்களுக்கு
பார்த்துப் பார்த்துப் பறிமாறினார்கள்.அந்த உபசரிப்பு சான்ஸே இல்லை. மனதும், வயிறும்
நிரம்ப எங்களின் பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தால் அடியார்கள் எல்லாம் புடை சூழ
ஒரு அடியார் முன் பதிகங்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
எனக்கு யார் எனத் தெரியவில்லை, நானும் பதிகம் கேட்டு விட்டு
விழுந்து வணங்கி விடைபெற்றுக் கொண்டு வெளியே வரும் போது முருகவேள் ஐயாவிடம் கேட்டேன் யார் இவங்க ஐயா?எனக் கேட்க இவர் தான் ஜெயராம் ஐயா
என்றார்.
அடடா காலையில் நாம் பார்க்க நினைத்த ஐயா இவர்கள் தானா, பெருமானே
உன் கருணையே கருணை என மீண்டும் போய் வணங்கி விட்டு வந்தேன்.
வசதிகள்யில்லாத போதும் கூட அடியார்களுக்குத் தொண்டு செய்து
கொண்டேயிருப்பாராம். தியாகராஜருக்கு பூ கட்டித் தருவதை தலையாய தொண்டாகச் செய்கிறார்,
இவரின் வருமானத்தையெல்லாம் அடியார்களுக்காகவே செலவு செய்கிறார்.
முன்பு வேறு ஒரு இடத்தில் தொண்டு செய்ததாகவும், பின்பு அரன்பணி
அறக்கட்டளையுடன் இணைந்து இங்கே ஆரூரர் திருஅமுதுக் கூடம் கமலாலயம் தென்கரையில் ஆரம்பித்து
நடத்தி வருவதாகவும், அடியார்கள் யார் வந்தாலும் தங்குமிடம், உணவு எந்த எதிர் பார்ப்பும்
இல்லாமல் தருகிறார் என்றார்கள்.
நம் நார்மல் வாழ்வை ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் யோசித்தால்
தன் குடும்பம், தன் மக்கள், தன் வாழ்க்கை, தன் சேமிப்பு என்பதைத் தாண்டிய ஒரு வாழ்வு
இருக்கிறது, இப்படியும் வாழலாம் என்று பார்க்கும் பொழுதே அவ்வளவு பிரமிப்பாய் யிருக்கிறது.
முதலில் இந்தத் தொண்டு செய்ய மனது வேண்டும், அதை இறைவன் பூரணமாகத்
தந்ததால் என்னவோ இவ்வளவு செய்த மனிதர் அவ்வளவு எளிமையாகத் தெரிகிறார். வாழ்க்கை ஒவ்வொரு
நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்களைத் தந்து கொண்டேயிருக்கிறது.
எங்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என வகை வகையாக
வழங்கினார்கள். புது ஊருக்குப் போய்விட்டு ஒரு வேளை கூட யாரும் ஹோட்டலில் சாப்பிடவேயில்லை.
அனைத்தும் ஆரூர் திரு அமுதக் கூட அடியார்களே தந்தார்கள். 60 பேருக்கு மூன்று வேளையும்
சுவையான உணவு இறைவன் கருணையால் கிடைத்தது.
திருவாரூர் தேரின் போதெல்லாம் குறைந்தது 5000 பேர் இங்கு
சாப்பிடுவார்களாம், பந்தி நடந்து கொண்டேயிருக்குமாம். பத்து பேருக்கு சமைக்கணும்னா
ஆர்டர் பண்ற காலம் இது, யோசித்துப் பார்த்தால் இவர்களின் சேவைகள் பிரமிக்க வைக்குது.
ஐயாவின் காலில் விழுந்து நமஸ்கரித்து விட்டு ஜெயராம் ஐயாவின் சேவைகள் இன்னும் நன்றாகத்
தொடர இறைவன் கருணை புரிய வேண்டும் என வேண்டிக் கொண்டு புறப்பட்டோம். இப்படிப்பட்ட அடியாரைக் காணும் பாக்கியம்
+ அவர் பெருமைகளைக் கேட்கும் பாக்கியமெல்லாம் உழவாரப் பணி வந்தால் மட்டுமே கிட்டும்.
இதோ எங்கள் பயணம் காலை 8 மணிக்கு திருப்புகலூரை நோக்கித்
தொடர்ந்தது. எப்படிப் பட்ட உழவாரப் பணியாக இருந்தது, சுற்றிலும் அகழி நடுவில் கோவில் என்றால் பெங்களூரிலிருந்து
வந்த எங்களுக்கு என்னவேலையிருந்தது ?
அப்பர் பெருமானுக்கு கைலாயக் காட்சி கிடைத்து விட்டது அதை
விடப் பெரிதாக வேறு என்ன இருந்துவிடப் போகின்றது? எதற்காக அவர் இங்கே வந்து முக்தி
அடைந்தார்?
இங்கும் அவருக்கு சோதனைகளைத் தந்து திருவிளையாடல் புரிந்தானா
இறைவன் ?
இதை எழுதுவதற்கு முன்பாகவே எங்களை இங்கு அழைத்தவர்களுக்கும், ஒரு பறவை தன் இறக்கைக்குள்
தன் குஞ்சுகளை எப்படி பாதுகாத்து வைக்குமோ, அந்தத் தாய் பறவை எப்படி தன்னலம் பார்க்காதோ
அது போல எங்கள் முருகன் ஐயா எங்களையெல்லாம் கூட்டிச் சென்றார்.
வெளியூர் உழவாரப்பணி என்பது சாதாரணம் கிடையாது, பஸ் புக்கிங்ல ஆரம்பித்து, ஒவ்வொருவரையும்
விட்டு விடாமல் சரியா டைம் சொல்லி ஏற்றிக் கொண்டு பாதுகாப்பா பணி முடித்து இறக்கி விடும்
வரை அவர்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் கவனித்துச் செய்வது என்பது எப்பேர்பட்ட விஷயம்.
பெருமானின் துணை, அப்பர் பெருமான் திருவருள் என்று ஒருவரியில் சொல்லி விட்டு ஐயா நகர்ந்து
விடுவார். எந்த அடியாருக்கும் பாராட்டு என்பது துளியும் பிடிக்காது ,எல்லாம் அவன் செயல்
என்பதே தாராக மந்திரம்.
எங்களை எல்லாம் தனக்குள் வைத்து பாதுகாப்பாய் அழைத்துச் சென்ற முருகன் ஐயாவுக்கு சாதாரண
நன்றியெல்லாம் சொல்ல முடியாது, ஏன்னா எந்த வார்த்தையைப் போட்டாலும் அவர் உழைப்புக்கு
முன் கால் தூசி தான், வாழ்நாள் நன்றி என்று வேண்டுமானால் சொல்லலாம். இறுதி வரை
படிக்கும் பொழுது உங்களுக்கே புரியும்.
ஒவ்வொரு உழவாரப்பணியும் ஒவ்வொரு அனுபவம். அதற்கும் மேல,அதற்கும் மேல ன்னு ஒரு வசனம்
வருமே அது போல இந்த உழவாரப்பணி போன உழவாரப்பணியைக் காட்டிலும் அதற்கும் மேலாக இருந்தது.
பொதுவா கர்நாடகா மாநிலத்தின் வெளியே நாங்கள் உழவாரப்பணி செய்யும் பொழுது கோவிலின் வரலாறு
கேட்பேன், நான் மறந்தாக் கூட எங்க அடியார் என்னை கூப்பிட்டு கேட்க வைப்பாங்க.
ஒன்று அல்லது இரண்டு வரலாறுகள் இருக்கும். இப்படிப்போனோம், இப்படி வேலைகள் இருந்தன,
இதைப் பற்றித் தெரிந்து கொண்டோம்ன்னு முடிச்சுடலாம். யார் எங்கே என்ன பணி செய்தாங்கன்னு
எங்கயிருந்து பார்த்தாலும் தெரியும். ஓ இங்கே இங்கே இந்தப் பணி நடக்கின்றதா எனப் புரிந்து
கொள்ளலாம்.
இந்தப் திருப்புகலூர் கோவில் உழவாரப் பணியை அப்படிச் சொல்லவே முடியாது. ஏனெனில் இது
பிரம்மாண்டம், போன 60 பேர் குழு குழுவாகப் பிரிந்து வேலை செய்தாலே பாதி இடத்தைக் கூட
கவர் செய்ய முடியாது. ஒரு அரைக் கிலோமீட்டர் நடந்து பார்த்தால் தான் தெரியும், யார்
என்ன வேலை செய்கிறார் என? அந்த அளவு பிரம்மாண்டமான கோவில்.
நடுவில் கோவில் சுற்றி மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட அகழி என பார்க்கும் பொழுதே
பிரம்மாண்டமாய் தெரிகின்றது. ஏன் இது வித்யாசமாய் நீரால் சூழப்பட்டிருக்கிறது, வரலாறு
இருக்குமா? என்றால் கண்டிப்பாக இருக்கும் என்றே தோன்றியது.
முதல் நாள் இரவு முழுவதும் பஸ் பயணம், நடுவில் தூங்கி ஓய்வு எடுக்க நேரம் இல்லை, மறுநாளும்
சீக்கிரம் எழுந்து தியாகேசரைப் பார்த்து விட்டு நேரே இங்கு வந்தாச்சு.
வேலைகள் நிறைய என்றால் நிறையவேயிருந்தன. உட்காராமல் வேலை செய்தால் ஒரு 10% ஆவது முடிக்க
முடியும்.
கோபுரத்தில் உள்ள மரம், செடிகளையெல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்தி மருந்து வைக்க வேண்டும்.
ஆண்ட அரசை கூப்பிடதே அதற்காகத் தான், ஆதலால் அனைவருக்கும் நல்ல தெம்பைத் தா இறைவா என்று
வேண்டிக் கொண்டே பொருட்களை எல்லாம் இறக்கினோம்.
நம்ம அடியார்களுக்கெல்லாம் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடற
மாதிரிஆச்சே வந்தாங்க, கோவிலின் என்னென்ன வேலைன்னு பார்த்தாங்க, டூல்ஸ் எல்லாம் எடுத்துட்டு
கடகடன்னு வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
எல்லாம் அவன் செயல், இது அவருக்காகச் செய்கிறோம் என்ற எண்ணம் எப்பொழுதும் இருப்பதால்
வேலைகள் கடகடவென ஆரம்பமானது.
ஏகப்பட்ட வரலாறுகள், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றது.
கர்நாடகாவில் ஸ்ரீரங்கப் பட்டிணம் கங்கோதேஸ்வரர் கோவில் பற்றி எழுதும் பொழுது சற்றே
பெரிய வரலாறாக இருந்தது.
நம்ம தமிழ்நாடுன்னு கோவிலுக்குப் போனால் எவ்வளவு பெரிய கோவில்கள் எவ்வளவு அருமையான
வரலாறுகள் என நாம் அடுத்து, அடுத்து அடுத்து எனக் கற்றுக் கொள்ள ஏராளமாக உள்ளது, அதுவும்
இந்தப் திருப்புகலூர் வரலாறு என எழுதினால் அதுவே 6 பாகம் போகும் போல
முடிந்தவரை சுருக்கமாக எழுத முயற்சிக்கின்றேன்
இன்னொரு முறை டிக்கெட் எடுக்காமல் திருப்புகலூர் போலாமா? வாருங்கள் போகலாம்.
உழவாரப்பணியில் என்னென்ன செய்தோம்ன்னு சொல்லிட்டு வரலாறு பற்றிப் பார்ப்போம்.
1 முதலில் கோவில் கோபுரத்தில் உள்ள செடிகளை எல்லாம் செய்யும் பணி. கீழேயிருந்து மேலே
பார்த்தால் கோபுரத்தில் ஏறி அடியார்கள் நின்று கொண்டு செய்யும் பணி என்பது அப்பாடா
என ஆச்சர்யப்பட வைக்கின்றது.
2. அகழியைச் சுற்றி பலவிதமான மரங்கள், காட்டுச் செடிகள் அது அங்கு தேவையே இல்லை. அதையெல்லாம்
வெட்டிச் சாய்த்தோம்.
3 அதையெல்லாம் கொண்டு போய் போடுவது வெளியே மட்டுமே அதுவே கிட்டத்தட்ட 300 me தூரம்
இருந்தது. சரியான நடை அன்றைக்கு அனைத்து அடியார்களுக்கும். ஒரு அரை மாரத்தானே வந்து
விட்டது. கோவில் பெரிது சுற்றிச் சுற்றி நடந்து வந்தால் மட்டுமே வேலையாகும்.
4.அகழியில் உள்ள தீர்த்தம் பாண தீர்த்தம், அவ்வளவு வரலாறுச் சிறப்பு மிக்க தீர்த்தம்.
பாணாசுரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம், அக்னி பஹவான் நீராடி, ஸ்வாமியை வேண்டி சாப
விமோசனம் பெற்ற தீர்த்தம்.
நளமஹாராசன் நீராடி, பெருமானை வணங்கியவுடன் சனி பகவான் இங்கேயிருந்து 7 கல் தொலைவு உள்ள
திருநள்ளாறு போ உன்னை விட்டு விடுகிறேன் என்று சொன்னாராம்
இப்படி ஏகப்பட்ட பெருமைகள் வாய்ந்த இந்த தீர்த்தம் அப்படியே பாசி மண்டிக் கிடக்கிறது.
புதர் மண்டி புல்லும், மரமும் செடியும் வளர்ந்து கிடக்கிறது. கண்டிப்பாகச் சுத்தம்
செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தத் தீர்த்தம்.
5. முதலில் சுற்றியுள்ள செடிகளை களை எடுப்போம், நேரம் குறைவு தீர்த்ததில் கை வைப்பது
நேரத்தைப் பொறுத்து எனத் தீர்மானித்து களத்தில் இறங்கியாச்சு.
4. குளத்தின் வாயிலில் உள்ள செடிகளை முதலில் எடுத்தோம், அப்படியே குளத்தின் பக்கவாட்டில்
போய் ஜாக்கிரதையாக நின்று கொண்டு பக்கச் சுவர்களில் உள்ள எல்லா செடிகளையும் அடியார்கள்
வெட்டினார்கள். வெட்டுவதை எடுத்து மேலே போடணும் னாலே சுவர் உயரம், பிறகு அதை எடுத்து
வெளியே போட இன்னும் நடக்கணும், ஒரு இடத்தில் ஒரு அடியார் செடிகளை வெட்டினால் கூட 3
அடியார் இருந்தால் மட்டுமே அந்த வேலை பூர்த்தியாகும், இந்த அகழி சுமார் ஒரு கிலோ மீட்டர்
இருக்கும் போல
5. அடுத்தது அகழியின் அடுத்த மூலையில் பெரிய மஞ்சனாத்தி மரம் அதை விட்டால் வேர் வளர்ந்து
குளத்தை பாதிக்கும், ஆதலால் அந்தப் பக்கம் ஒரு அடியார் டீம் அந்த வேலைகளைச் செய்தார்கள்.
அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏம்பா வெட்டறது தான் வெட்டுறீங்க எங்க வீட்டு மரத்தையும்
சேர்த்து வெட்டித் தாங்களேன், எங்க வீடும் சுத்தமாகுமே
வெட்டவே வராத வேரையெல்லாம் அடியாரிடம் ஐயா நீங்க ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டே
வெளியே வரும், இந்த வேர் எல்லாம் எம்மாத்திரம்ன்னு உசுப்பேத்தி சிரிச்சு வெட்ட வைச்சாச்சு.
உழவாரப் பணி வந்தால் நகைச்சுவைக்கு பஞ்சமே வராது
6.11 மணிக்கு மேல் வெயில் கொஞ்சம் கூடுதலாகவே சுட்டெரித்தது. டயட்டு ஆகும் பொழுதெல்லாம்,
மோர், டீ, சுக்கு காபி, வடை, தட்டை என வந்து கொண்டேயிருந்தது. நீர் மட்டும் தான் அதிகம்
தேவைப்பட்டது.
7. சின்னப் பிள்ளைகள் ஓடி ஓடி அடியாருக்கெல்லாம் நீர் தந்தார்கள். ஒரு லிட்டர் தண்ணீர்
ஒரு செகன்ட்ல காலியாகது, அவ்ளோ வெயில் அவ்வளவு வேலை.
8. ஒரு வழியா காலை 11 மணி வரை ஒரு பக்கம் முடித்து அடுத்த பக்கம் போனோம், முற்கள் நிறைய
இருந்ததால் அந்தப் பகுதிகள் வெட்டவே சிரமமானது. சுற்றி நடக்க சரியான இடம் இல்லை, கற்கள்
நிறைய யிருந்ததால் வெட்டுவதற்கும், வெட்டியதை அள்ளிப் போடவும் சிரமமாகயிருந்தது. அதனால்
அதை ஒரு பள்ளத்தில் போட்டு பாதுகாப்பாக நெருப்பு வைத்து விட்டோம்.
9. மதியம் வரை அடியார்கள் வேலை செய்தது மிக அதிகம் ஆனால் வேலை முடிந்தததென்னவோ அரைப்
பகுதி தான். நிலப்பரப்பு பெரியது. 60 அடியார்கள், 60 நாளில் செய்ய வேண்டிய வேலை இது,
ஒரு நாளில் எவ்வளவு முடிக்க முடியுமோ அவ்வளவு முடித்தோம்.
10. செங்கோட்டு செவ்வேள் சேனாதிபதி ஐயாவிடமெல்லாம் போன் கூடக் கிடையாது, எறும்பு, வண்டு,
முள்ன்னு எது கடித்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் அவர் பாட்டுக்கு வேலை செய்கிறார்.
கை கழுவும் இடத்திலும் அவ்வளவு அழுக்கு, பாசம் இருந்தது, அடியார்களோ ,பக்தர்களோ வந்தால்
வழுக்கிவிடும் என கை கழுவ வந்தவர் அதைப் பார்த்து விட்டு வேலை செய்தார். அந்தப் பண்பு
நமக்கு இல்லாவிட்டாலும், ஐயாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
11. ஒவ்வொரு அடியாருக்கும் அன்று மிகச் சரியான வேலை, என் கடன் பணி செய்து கிடப்பதே
என்ற வரி மட்டுமே ஒவ்வொரு அடியாரைப் பார்க்கும் போதும் தோன்றியது.
12. மதியத்திற்கு மேல் கோவில் உள்ளுக்குள் எல்லாம் பெருக்கி சுத்தம் செய்தோம். அப்பொழுது
தான் அக்கி பகவானும், தியாகராஜர் மாதிரி ஒரு படமும் இருந்தது தெரிந்தது பிறகு விசாரித்ததில்
சந்திரசேகரர் எனத் தெரிந்து கொண்டோம். திருவாரூரில் தியாகராஜர், திருப்புகலூரில் சந்திரசேகரர்
விசேஷம் என்றார்கள். உழவாரப் பணி செய்ய வைத்து காட்சி தந்தார் பெருமான்.
13. மதியம் மேல் சற்றே வெயிலின் தாக்கம் குறைய வெட்ட வேண்டிய மரங்கள் அடர்ந்து கிடந்தது.
இப்போது வெட்ட வெட்ட அதிலிருந்து செம சிவப்பு எறும்புகள் வெளிப்பட்டது. எங்களையும்
முத்தமிட்டுச் சென்றது.
14. பணிகள் தொடர்ந்தன. வேறு ஒரு உழவாரப்பணி அடியார்கள் உள்ளே எல்லாம் நீர் ஊற்றி கழுவி
சுத்தம் செய்தார்கள். பூச்சு வேலைகள் நடந்து கொண்டுயிருந்தன.
15. முருகநாயனார் தோட்டம், சம்பந்தர், அப்பர், முருக நாயனார், யாழ்பாணர் என அனைவரும்
வந்து தங்கிய மடம் எல்லாம் பாழடைந்து கிடக்கிறது. பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷங்களில்
நெல்லும், உமியும் கொட்டி பூட்டி வைத்திருக்கிறார்கள். 100 வருட வரலாற்றை வெளிநாட்டுக்காரன்
கொண்டாடுகிறான் என்றால் 1000 வருட வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலைப் பாதுகாக்க வேண்டியது
நம் கடமையல்லவா. எப்பேர்பட்ட புனிதமிக்க இடம், பராமறிப்பற்று சுத்தமில்லாமல் புதர்
மண்டிக்கிடக்கும் பொழுது மனதுக்கு வேதனையாகயிருந்தது.
16. நாங்க காலையில் போன பொழுதே ஸ்வாமி முன்னால் இருந்த தீபம் ஏற்றும் பிரபாவளி மாதிரி
உள்ளதை தேய்க்கத் தந்தார்கள். பெண் அடியார்கள் அருமையாக தூய்மை செய்து தந்தார்கள்.
17. கோவில் அகழியின் இறுதிப் பகுதிக்கு வர மாலை ஆனது. அங்கே சந்திரசேகரர் கற்சிலையில்
மூலவராகக் காட்சி தந்தார், அங்கே ஒரு மண்டபமும் இருக்கின்றது. ஏதோ விழா நடக்குமா? தெரியவில்லை.
திரும்பிப் பார்த்த பொழுது பாணதீர்த்தத்தைச் சுற்றி ஓரளவு சுத்தமாகயிருந்தது. இன்னும்
நிறைய வேலைகள் அங்கே செய்வதற்கு யிருக்கின்றது இறைவன் அழைத்தால் மீண்டும் சந்தோஷமா
வருவோம்.
நான் எழுதியிருப்பது மிக மிகச் சுருக்கம் தான் அடியார்கள் செய்த பணியெல்லாம் எழுத்தில்
கொண்டு வரவே முடியாது. அங்கேயிருந்து அனுபவிக்கணும்.
இப்பொழுது கோவில் வரலாறு, ஸ்தல மஹிமை பற்றிப் பார்ப்போம். தெரிந்து கொண்டு போய் பார்த்தால்
எப்பேர்பட்ட இடத்தில் நமக்கு உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளது என்பது நன்கு
விளங்கும்.
1: திருநாவுக்கரசர் முக்தி அடைந்த ஸ்தலம். முக்கால நாதர் அங்கேயிருக்கிறார். பூதேஷ்வார்,
பவிஷ்வேஷ்வரர், வர்த்தமானேஷ்வரர். கைலாயக் காட்சி கிடைத்த பிறகு வேறென்ன வேண்டும் அப்பர்
பெருமானுக்கு?இவ்வளவு உழவாரப்பணிகள் செய்தும் பாடல்கள் பாடியும் இறைவன் அப்பர் பெருமானை
இத்தலத்தில் சோதனை செய்கிறாரா? என்றால் இல்லை அவர் பெருமைகளை
உலகறியச் செய்து நாம எப்படி இருக்க வேண்டும் என்பதை ஸ்வாமி காண்பிக்கின்றார். பொன்,
பொருளா, மாணிக்கக் கல்லா உழவாப் பணியின் போது கிடைக்கிறது அப்பருக்கு, அதுவும் ஒரு
குப்பை என எறிந்து விடுகிறார், நாட்டிய மங்கைகள் ஆடி மகிழ்விக்கின்றார்கள், என் அப்பனின்
நடனம் போதும் எனக் கருதி வந்து விடுகிறார். எல்லாவற்றிக்கும் மேலான பரம்பொருள் பேரின்பமா
அங்கே யிருக்க எதற்கு இந்தச் சிற்றின்பம் என அவருக்குக் காட்டி நமக்குக் சொல்கிறார்.
அப்படி அப்பர் பெருமான். முக்கால மூர்த்திகள் இங்கு இருக்க சித்திரை சதயத்தில் ஜோதியில்
கலந்த ஊர் திருப்புகலூர். 10 நாட்கள் விழா நடக்கின்றதாம்.
2. பாணாசுரன் தன் தாய் மாதினியாரின் பூஜைக்காக இத்தல சுயம்பு மூர்த்தியை எடுக்க நினைத்து
முடியாமல் போக சுற்றி குழி தோண்டி அடியிலிருந்து எடுக்க நினைக்க அதைச் சுற்றி தண்ணீர்
வர பின்பு தன் தவற்றுக்காக வருந்தி, தன் தாய் பூஜைக்கு லிங்கம் சமர்பிக்க முடியவில்லையே
என உயிரை மாய்த்துக் கொள்ள வாள் எடுக்கும் போது இறைவன் காட்சி தந்து நான் வருகிறேன்
என அங்கு போய்விட்டு பிறகு இங்கு வந்ததாகக் கூறுகிறார்கள்.
3. சுந்தரருக்கு செங்கற்களை தங்கக் கற்களாக மாற்றிய ஸ்தலம். வாஸ்து பரிகார ஸ்தலம் என்றும்
சொல்கிறார்கள்.
4. ஒரே கோவிலுக்குள் இரண்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள். அக்னி புரீஸ்வரர் மற்றும் வர்த்தமானீஸ்வரர்.
சம்பந்தரால் பாடல் பெற்ற வர்த்தமானீஸ்வரர், அக்னீஸ்வரர் பக்கதிலேயே உள்ளார்.
5. அக்னிக்கும் அவர் அப்பா வாயிவிற்கும் சண்டை வர அவர் சாபம் தர, அவர் தன் குரு பிரகஸ்பதி
சொல்படி இந்த ஸ்தலம் வந்து சாப விமோசனம் வேண்ட அவருக்கு சாப விமோசனம் தந்த ஸ்தலம்.
6.மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம், சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடியுள்ளார்கள்.
7. அம்மன் கருத்தார் குழலி. தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்க்க மருத்துவச்சி வடிவில்
வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டு போனாளாம். சுகப்பிரசவம் நடக்க தஷிணையாக காணி நிலம் தந்தார்களாம்.
மருத்துவக் காணி நிலம் என இன்றும் அது உள்ளது என்கிறார்கள்.
8. இங்கே அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதி. பிரசவத்தால் இன்று வரை யாருக்கும் எந்தத்
தீங்கும் நிகழவில்லை என்கிறார்கள். திருமணம், மகப்பேறுக்கு கை கூட கருந்தார் குழலி
அம்பாள் அருள்பாலிக்கிறார்.
10. நளமஹாராஜா சனீஸ்வர பகவான் தாக்கத்தினால் இருந்த பொழுது இங்கு வந்து பாணதீர்த்த்தில்
நீராடி அக்னிபுரீஸ்வரரை வணங்கிய பொழுது சனிபகவான் அவருக்கு அனுக்கிரஹ மூர்த்தியாகக்
காட்சி தந்து இங்கிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறு போ, நான் உன்னை விட்டு விடுகிறேன்
என்றாராம்.
12. இல்வலன் மற்றும் வாதாபி இரு அரக்கர்களுக்கு பயந்து தேவர்கள் புகலிடம் தேடி இங்கு
வந்ததால் திருப்புகலூர் என்று அழைக்கபடுகிறது.
13. சரண்ய மஹாராஜா பூஜை செய்ததால் சரண்யபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
14. வாயு, வருணன், அக்னி மூவருக்கும் சண்டை வந்து யார் பெரியவன் என்று வந்த பொழுது
அக்னி மறைந்து விட்டாராம். அக்னியில்லாமல் யாகங்கள் மற்றும் இறைவனுக்கு நைவேத்யம் கூட
செய்ய முடியாத நிலை ஏற்பட இறைவன் அக்னியை மீண்டும்
வரவைத்து இரண்டு முகம், 3 பாதம், 4 கொம்பு, 7 கை, 7 ஜ்வாலை என புதிய உருவம் தந்தாராம்.
இப்படி ஒரு உருவம் அக்னி பகவானுக்கு இருப்பதை இங்கு தவிர நான் வேறெங்கும் கண்டதில்லை.
15. முருகநாயனாரின் அவதாரத்தலம். இவர் இங்குள்ள வர்த்தமானேஸ்வரருக்கு தினமும் பூ கட்டித்
தந்து கைங்கர்யம் செய்துள்ளார். இவரது திருமடமும் இங்குள்ளது.
16. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சிறுத்தொண்டர் திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள்
முருக நாயனாருடன் இருந்து மகிழ்ந்து தொண்டு செய்த மடம் இவ்வூரில் உள்ளது.
இன்னும் பல சிறப்புக்கள் இக்கோவிலுக்கு உள்ளது. நான் ஏதோ படித்ததை கோடிட்டு காட்டியுள்ளேன்.
இப்பேர்பட்ட திருத்தலத்திற்குத் தான் உழவாரப்பணி செய்ய எல்லா ஏற்பாடுகளும் முருகன்
ஐயா செய்து அழைத்துச் சென்றார். முன்னர் கூறியது போல எப்படி நாம் நன்றி சொல்வது, அடுத்த
உழவாரப்பணியில் இன்னும் சிறப்பாக வேலை செய்தால் ஐயாவிற்குப் போதும். வேறெதுவும் எங்கள்
அடியார்கள் எதிர் பார்க்க மாட்டார்கள்.
எல்லாப் பணியும் முடித்து விட்டு கற்ப்பூர ஜோதியில் என் பெருமானை மனதார நினைத்து விட்டு,
வாய்ப்புக்கு அப்பர் பெருமானுக்கும், ஈசனுக்கும், அடியார்களுக்கும் நன்றி கூறி இன்னும்
இரண்டு கோவில் பார்த்து விட்டு நல்லபடியாக ஊர் வந்து சேர்ந்தோம்.
சிவா திருச்சிற்றம்பலம்
கருத்துகள்
கருத்துரையிடுக