20230528 உழவாரப்பணி பன்னூர் ஹனுமந்தேஸ்வரர் கோவிலில்
20230528
🙏
சிவா திருச்சிற்றம்பலம்
மே மாத உழவாரப்பணி 28-5- 23 அன்று எங்களது பெங்களூரு ஆண்ட
அரசு உழவாரப்பணித் திருக்குழு மூலம் பன்னூர் ஹனுமந்தேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
கோவிலின் மேப் இதோ!
Shri Eshwara(Shiva) Temple
https://maps.app.goo.gl/895wkS5QGoVNAyRk8.
ஒவ்வொரு உழவாரப்பணியுமே மறக்க முடியாத பல சிறப்புக்களைக்
கொண்டிருக்கும் இந்த உழவாரப்பணியும் அப்படியே 200/100 % இருந்ததுன்னு சொன்னால் அது
மிகையாகாது.
ஏகப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்களை உடைய ஆலயம். அனுமனால் பிரதிஷ்டை
செய்யப்பட்டு இராமர் சீதையால் பூஜித்த ஸ்தலம்.
சரி கோவிலுக்குப் போவதற்கு முன் நாங்கள் கிளம்பியது மற்றும்
எங்கள் அடியார்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
பன்னூர் இங்கேயிருந்து நல்ல தூரம், 150 km வரும். கொஞ்சம்
முன்கூட்டியே கிளம்ப வேண்டியிருந்தது. முருகன் ஐயா முதல் நாளே ஒவ்வொருவருக்கும் போன்
செய்து சரியான நேரத்துக்கு வந்துடுங்கம்மான்னு ஞாபகப்படுத்தினாங்க. இதெல்லாம் மிகப்
பெரிய்ய விஷயம், ஒருவர் தாமதமாக வந்தாலும் மீதி இருக்கும் நபர்களுக்கும் லேட்டாகும்,
விட்டு விட்டும் போகவும் மனது வராது, அதனால் நம்மால் தாமதமாகக் கூடாதுன்னு சரியா
6:30க்கே போய் விட்டோம்.
இந்த பன்னூர் கோவில் மிக மிகச் சிறப்பான வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த கோவில்.
கோவில் மட்டுமல்ல ஊரே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.இப்படி
வித்யாச வித்யாசமான ஊர்களில் உள்ள ஸ்வாமிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் எங்கள் அடியார்களுக்கு
என் நமஸ்காரம். முக்கியமா சரவணன் ஐயாவிற்கு மனமாந்த நன்றிகள்.
List பார்த்து குறிப்பெடுத்து அந்த ஊர் போய் பார்த்து, அவங்க
கிட்ட பர்மிஷன் வாங்கி, எங்களை கூட்டிப் போகும் முன் அடியார்களுக்கு ஏகப்பட்ட வேலைகள்
இருக்கின்றது.
ஊர் கூடித் தேர் இழுப்பது போல் தான் ஒவ்வொரு உழவாரப் பணியும்.
தன்னலமில்லாத அந்த மனதுக்கு என் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.
அடுத்தது முக்கியமா நிறைய முறை எழுதணும்ன்னு நினைச்ச அடியார்
எங்க ஓசூர் சிவ பிரகாஷ் ஐயா தான்.
நாமெல்லாம் கோவிலுக்குப் போனால் சாமி பார்ப்போம், பின் பிரசாதம்
தந்தால் அங்கே போய் நிற்போம், கையில் எடுத்துப் போவது ஒரு பூஜைத் தட்டு மட்டுமே. வேறென்ன
ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில், மொபைல் பர்ஸ் இது தவிர வேறெதுவும் கிடையாது.
பிரகாஷ் ஐயா கோவிலுக்கு வந்தாங்கன்னா தயாரா அவர் கையில் மருந்து
கிட்டு களை எடுக்க டூல்ஸ் எல்லாம் இருக்கும், கோவில் கோபுரத்துல செடியைப் பார்த்தாங்கன்னா
கடகடன்னு ஏறி வெட்டி பிடுங்கி, மருந்து அடிச்சுட்டு வந்துடுவாங்களாம்.
உழவாரப் பணிம் போது மட்டும் உழவாரப்பணி செய்வதோடு அல்லாமல்
ஐயா தான் போகின்ற எல்லா கோவில்களுக்கும் பணி செய்ய தயாராக வருவார்.
ஒரு டாக்டர் எப்படி ஸ்டெத்தோட வருவாரோ ஐயா அப்படி கிட்டோட
வருவார். யோசிச்சுப் பாருங்க கடகடகடன்னு கோபுரம் மேலே ஏறுவது எல்லாம் சாதாரண செயல்
அல்ல, உடம்பு முழுவதும், அதில் ஓடுகின்ற ஒவ்வொரு செல்களிலும் இறைவனுக்குப் பணி செய்யணும்ன்னு
எண்ணத்தோட இருப்பதெல்லாம் எவ்வளவு பொய்ய விஷயம்.
வேலை முடிந்து சாயங்காலம் அனைத்து அடியார்களும் இறைவனை பூஜை
செய்யப் போனாலும், பிரகாஷ் ஐயா தன் வேலையை பார்த்து முடித்தவுடன் தான் வருவார். இறைவனே
அவரைக் காண காத்திருப்பார்ன்னு நான் நினைப்பேன்.
அப்பர் எப்படி உழவாரப்பணி செஞ்சுருப்பார்ன்னு எனக்குத் தெரியாது
ஆனால் பிரகாஷ் ஐயாவைப் பார்த்தால் இவர் மாதிரி செஞ்சுருப்பாரோன்னு தோணும். இப்பேர்பட்ட
ஐயாவோட நாங்களும் போகின்றோம் என்பதே பாக்கியம் தான் . பிரகாஷ் ஐயாவிற்கு என் நமஸ்காரம்:
இவர் போல் ஏகப்பட்ட அடியார்கள் பணி செய்கிறார்கள், பல அடியார்கள்
பெயர் கூட எனக்குத் தெரியாது. ஒவ்வொருவரின் பணிகளைப் பார்த்து வியந்து வியந்து போவேன்.
எப்படி இப்படி down to earth ஆ இருக்காங்கன்னு. கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு.
வாழ்க்கையில் நமக்குத் தேவை பாசிட்டிவிட்டி அது உழவாரப் பணிக்கு
வந்தால் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கும்.
இந்த முறை அடியார்களுக்காகச் செய்தது அவல் கேசரி, விடிகாலை
3:30 க்கு செய்ய ஆரமித்து 4:30 க்கு முடிச்சாச்சு. பாலில் செய்தால் சற்றே க்ரீமியா
இருக்கும், அதனால அதிலேயே செய்தாச்சு. வழக்கம் போல காரப் பொரி
இதெல்லாம் நல்லாருக்குன்னு அடியார்கள் சொல்லும் போது அந்தப்
பெருமை அனைத்தும் அவனையே சாரும்.நம்ம கையில் எதுவும் இல்லை.
சுமார் காலை பத்துமணி ஆனது கோவிலுக்குப் போக, டிபன் சாப்பிட்டு
விட்டு கடகடன்னு வேலையில் இறங்கியாச்சு. கோபுரம் மேலே கொஞ்சம் அடியார்களுக்கு வேலையிருந்தது.
கோவில் பெரிது என்பதால் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து
முன்னாடி, பின்னாடி என புற்களையெல்லாம் வெட்ட ஆரமித்தோம்.
தேவையில்லாத ெசடிகளை அப்பப்போ பிடுங்கி சுத்தம் செய்தால்
கோவில் எப்பவும் இருக்கும், அது போல நம் மனத்தில் உள்ள தேவையில்லாத விஷயங்களையும் பிடுங்கிப்
போட்டால் மனசும் சுத்தமாகும். சொல்றது, எழுதறது எல்லாமே சுலபம் தான்.அந்தக் கெட்ட பழக்கத்தை
விடுவது தான் கடினம்.
உழவாரப் பணியின் போது எரியப் படும் கலோரிகளினால் உடலும்,
அடியார்களோடு பணி செய்வதால் மனமும் சுத்தமாகும்.
இரண்டு மணி நேரம் எல்லா அடியார்களின் கைகளும் சேர இடம் கொஞ்சம்
கொஞ்சமாக சுத்தம் ஆனது.
எவ்வளவு பெரிய நடைப் பயணத்திற்கும் ஆரம்பம் முதல் அடி தான்
அது போல பெய்ய வேலையாக இருந்த பணியில் அனைவரும் ஈடுபட , ஈடுபட கொஞ்சம் கொஞ்சமாக கோவில்
சுத்தமானது.
நான்கு பேர் புற்களையெல்லாம் வெட்ட சில பேர் வெட்டிய புற்களை எடுக்க, அங்கிருந்து பல கைகள் மாறி வெளியே கொட்டப்
பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக வெயிலும் அதிகரிக்க அதிகரிக்க நீரும், மோரும்,
மாங்காயும் உள்ளே போனது. இடையில் எங்களின், கிண்டல்களுக்கும், சிரிப்புக்களுக்கும்
பஞ்சமில்லாமல் செய்யும் வேலையின் மதிப்பறிந்து நிறைவான மனத்துடன் செய்யும் பொழுது மலைப்பே
தெரியாமல் வேலை ஓடியது. இந்த நாள் இறைவனுக்கானது, அவனுக்கு பணி செய்ய வந்திருக்கோம்,
இறைவா சக்தி கொடுன்னு கேட்டுட்டே வேலையை பார்த்தோம்.
மண்வெட்டி எடுத்து வெட்டும் போது தான் தெரியும் விவசாயி எவ்வளவு
உயர்ந்தவன் என்று.
பெருமான் எங்கேயிருக்கிறார் என ஸ்வாமியை அப்பொழுது தான் தேடிப்
போனேன். கோவிலின் வாயில் வேறு பக்கம் இருந்தது.
சுவாமியைப் பார்த்து விட்டுத் தான் வேலையைத் தொடருவோம். இந்த
முறை டக்குனு வந்தவுடனே எல்லோருமே பணியைத் தொடங்கிட்டாங்க.
கோவில் உள்ளே குனிந்து போய் ஸ்வாமியைப் பார்க்கின்றேன் வைத்த
கண்ணை எடுக்க முடியவில்லை அவ்வளவு அழகு. எப்படி ஜம்ன்னு இருக்கார். உண்மையில் கர்நாடகா
சிவனை கொண்டாடிக் கொண்டுயிருக்கிறது.
நல்ல ஆர்வமான, அன்பான குருக்கள். ஸ்வாமியுடைய தல வரலாற்றை
திறந்த நீரோடை போலக் கொட்டுகிறார். எனக்குத் தெரிந்தவற்றை, என் சிற்றறிவில் ஞாபகம்
உள்ளதை எழுதுகிறேன்.
பன்னியூர் என்பது வன்னிமரங்கள் நிறைந்த சோலையாக இருந்ததாம்,
பன்னியூர் நாளடைவில் பன்னூர் ஆனதாம். மைசூருக்கு முதலேயே இந்த ஊர் இருந்ததாம். பிறகு
மைசூர் தசராவிற்கு வன்ன மர இலைகள், கட்டைகள் இங்கிருந்து போகுமாம்.
1.நம்ம பெருமான் அனுமனால் சாளக்கிராமக் கல்லால் பிரதிஷ்டை
செய்யப்பட்டவர் ஆதலால் ஹனுமந்தேஸ்வரர் ஆகிறார்.
2. இராமர், சீதையால் பூஜிக்கப் பட்டவர்
3. வில்ல சிலையாம் இது, மேலே வில்வ இலை போல் அபிஷேகத்தில்
தெரியுமாம்
4. 180° ல ஸ்வாமி சிலையிருப்பதால் பிறகு வந்த ராஜாக்கள் ஸ்வாமியைச்
சுற்றி சுவர் கட்டி கோவில் எழுப்பியுள்ளார்கள்.ஏன்னா அந்தச் சிலையை உள்ளே நுழைக்கவோ,
வெளியே எடுக்கவோ முடியாது..
5. இந்தக் கோவில் முதலாம் ராஜ ராஜ சோழனால் புனரமைக்கப்பட்டது.
6. ராஜ ராஜ சோழனின் மகள் சின்னக் குந்தவைக்கு ஒரு ஆபூர்வ
நோய் வர அதற்காக செய்யப்பட்ட எந்த மருத்துவ வசதியும் பலளிக்கவில்லையாம்.
7. அவரின் குரு மார்கள் நீ 1000 சிவன் கோவில்களை, கட்டியோ
(அ) புரமைத்தோ வந்தால் படிப் படியாக உன் மகளின் நோய் தீரும் என்று கூற ஒவ்வொரு இடங்களிலும் ஆலயம் அமைக்கிறார்.
இந்தக் கோவிலைப் பற்றிக்
கேள்விப்பட்டு இங்கு வந்து இதையும் புரைமைக்க குந்தவையின்
நோய் படிப்படியாக குறைந்ததாம்
8. சோழ ராஜரின் அக்கா இங்கே நிதி மந்திரியாகச் செயல் பட்டு
இந்தக் கோவிலைக் கட்டினாராம்.
9. இப் பெருமானின் சிலை சாளக்கிராமத்தினால் ஆனது ஆதலால் ஒவ்வொரு
1000 வருடங்களில் இது அப்படியே உறிந்து வருவது போல் தேய்ந்து வருமாம், பிறகு அதுவே
அப்படியே வளர்ந்து விடுகிறதாம். எத்தனை பெரிய ஆச்சரியம்.
10. விழுந்த அந்தத் துகள்களை ஆர்க்கியாலஜிக்கல் டிபார்ட்
மென்டில் தந்து பார்த்த பொழுது 3000 வருடங்களுக்கு மேல்பட்ட சிலாரூபம் என கண்டறியப்
பட்டதாம்.
11. சிவராத்திரி, பிரதோஷம், கெளரிப் பண்டிகை, பெளர்ணமி, ஜாத்ரைன்னு
பல விழாக்கள் நடைபெருகிறது.
12. இந்தக் கோவில் ஒரு குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட
திக்கை நோக்கியிருப்பதால் இதை ஸ்வர்க்க பாகல் ன்னு சொல்லுவாங்களாம். யாராவது இறந்தால்
அவர்கள் காரியம் முடிந்து, 13 வது நாள் வந்து இங்கே பூஜை செய்து விளக்கு ஏற்றினால்
நேராக ஸ்வர்க்கத்துக்குப் போவதாக ஜதீகமாம்.
13. இங்கே உள்ள ஸ்வாமிக்கு கலசம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை
செய்யும் போது தீராத நோய்கள் தீருமாம்.
14 சோழர்களின் கல்வெட்டுக்கள், சின்னங்கள் கோவிலின் தூண்களில்
உள்ளது.
15. பெரிய்ய குளம் உள்ளது. அதன் அடியில் ஒரு கதவு உள்ளதாம்
அதன் வழியே சுரங்க மார்க்கமாகப் போனால் ஸ்ரீரங்கப் பட்டிணத்தை அடையலாமாம்.
16. ஸ்ரீரங்கப்பட்டினத்து அலமேலு அம்மாள் இங்கே வந்து இருந்ததாகவும்,
இங்கே பூஜை செய்ததாகவும், இந்த ஊருக்கு யாரும் எந்த பாதிப்பும் செய்யக்கூடாது, அப்படிச்
செய்தால் அவர்கள் குலம் நாசமாயிடும் என்று சொல்லிவிட்டுச் சென்றாளாம். இப்போதும் மைசூர்
அரச பரம்பரை இங்கு வந்தால் தங்க மாட்டார்களாம்.
18. இங்கே அம்பாள் பெயர் ஆனந்தவல்லி. சீதை இங்கு ஆனந்தமாக
பூஜை செய்தாளாம்.
19. இந்த அம்பாள் 360 டிகிரி கோணத்தில் இருப்பாளாம் முன்னும்,
பின்னும் நிஜ மகளிருக்கு எவ்வாறு இருக்குமோ அவ்வாறே இருக்குமாம்.
20. ஜாத்திரையின் போது பல கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக
வழிபடுவார்களாம். பெரிய்யயயய கொடி மரம் கல்லால் ஆனது இருக்கு, அதில் அனுமன், விநாயகர்,
நந்தி, ராஜராஜ சோழன் இருக்கார்
நான் இங்கே எழுதியது என் நினைவில் இருந்த சில விஷயங்கள் மட்டுமே.
இன்னும் பல பெருமை கொண்டவர் இந்தப் பெருமான்.
இந்த ஊரே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊராம். சோழ நாடு
சோறுடைத் துன்னு சொல்வோமே அது போல பன்னூர்க்கு என்ன சிறப்புன்னா ஹஸி பத்ரே, பிஸி பெல்லாவாம்
.அதாவது எப்பவும் நெல் விளையுமாம் அதனால பச்சை நெல் எப்போதும் இருக்குமாம், கரும்பு
நிறைய விளைவதால் வெல்லம் பண்ணிட்டே இருப்பாங்களாம், அதனால வெல்லம் சூடா இருக்குமாம்.
ஹி ஹி வெல்லம் வாங்கித் திங்காம்ப் போயிட்டோமே😄😄
கிருஷ்ண தேவ ராயரின் குரு வியாசராயர் பிறந்த இடம் அங்கேயே
கோவில் அருகில் இருக்கு. மிகப் பெரிய்ய மடம் இருக்கு.
பக்கதிலேயே இன்னொரு கைலாச நாதர் கோவில் இருக்கு. பஞ்ச லிங்கம்
இந்த ஊரைச் சுற்றி இருக்கு.பெரிய நந்தி மொழு மொழுன்னு அவ்ளோ ரியலிஸ்டிகா இருக்கு. சுற்றி
வந்தா குபேர மூலையில் ஒரு லிங்கம் இருக்கு.
விஸ்வகர்மாங்கற
ஞானியுடைய ஜீவ சமாதியிருக்கு. அவரைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் பிரமாதமா இருக்கு, எதை
எழுத எதை விட
6 மணி பூஜைக்கு நாய்கள் எல்லாம் வருமாம். வேறெங்கும் இதையெல்லாம்
கேள்விப் பட்டதில்லை.
அஷ்டலெஷ்மிகள் இங்கேயே வந்து தங்கிய கதை இருக்கு, அதனால்
இங்கு உள்ள தலித் பெண்கள் வாய் கட்டி , சுத்தமடியோடு பூஜை செய்த கதையும் இருக்கு.
இப்படி ஏகப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் தான் இந்த
பன்னூர், கடவுள் எங்களை எங்க கூட்டிட்டு வந்திருக்கார் பாருங்க.
பெரிய ஐயா புத்தகம் மற்றும் திருவாசகம் சிடி போட்ட கதையை
முருகவேள் ஐயா சொன்னாங்க, பிரமிப்பா இருந்தது, ஐயாக்கு தெரியாமலேயே ஐயாவிடம் இருந்து
கருத்துக்களைப், பாடல்களை வாங்கும் போது ஐயாக்குத் தோன்றியதாம் சிவபெருமான் தான் சிவன்னு
சொல்லாம் எவ்ளோ கஷ்டப் பட்டு மாணிக்க வாசகரிடம் பாடல்களை வாங்கியிருப்பார்ன்னு, உண்மையில்
ஆடிப் போயிட்டேன் ஐயா எப்படி? இப்படி யோசிச்சீங்க?
சிவபெருமானால் எழுதப்பட்டது தான் திருவாசகம், அதை தான் சிவன்னு
சொல்லாமல் எப்படி எழுதி வாங்கியிருப்பார், எவ்ளோ நாளானதோ ? தெரியல்லை. இப்படி ஒரு கோணத்துல
யோசிச்சதேயில்லங்கய்யான்னு சொல்லிட்டேன். உண்மையில் ஆடிப் போயிட்டேன்.
ஆறுமுக சிவன், ஆனைமுக சிவன்னு முருகன், பிள்ளையாரைச் சொல்லுவோம்
அம்மையை எப்படி சொல்லுவோம் கேள்வி கேட்டு அழகு சிவன்னு சொல்லுவோம்ன்னு பதிலும் தந்தார்.
சாப்பிட்டு விட்டு மீதி பின் பக்க வேலைகளைப் பார்த்தோம்.
ஸ்வாமியின் அபிஷேக நீர் வரும் பாதையில் புதிதாக தொட்டி கட்டினார்கள்.
அடியார்களுக்குத் தெரியாத வேலைகளே இல்லை, பிளம்பர், எலக்ட்ரீசியன்,
கொத்தனார், விவசாயி ன்னு எல்லா வேலை களும் தெரிந்தவங்க எங்க அடியார்கள். மாலை நேரம்
ஆக ஆக எங்கள் வேலைக்களும் முடிய ஸ்வாமி தீபாரதனை பார்த்து பதிகங்கள் பாடினோம்.
குருக்கள் மீண்டும் தன் அன்பான நன்றியைச் சொன்னார் அழகான
கன்னடத்தில். பிறகு தலையே நீ வணங்காய் பாடி கோவிலைச் சுற்றி வந்து உழவாரப் பணியை நல்லபடியாக
நிறைவு செய்தோம்.
அப்பெருமானைப் பிரிய மனமில்லாமல், ஏன்னா பார்த்துண்டே இருக்கச்
சொல்லுது இந்தக் கண்கள்.இந்த வாய்ப்புத் தந்த
உன்னைப் பிரிய மனமில்லை என் பெருமானேன்னு மனதில் நினைச்சுண்டே பஸ்ஸில் ஏறினோம்.
எப்பவும் முருகவேள் ஐயா நமக்கு ஏகப்பட்ட நல்ல நல்ல கருத்துக்களைச்
சொல்வாங்க அதில் நாம எதை வேணா விடுவோம், பெயரை
விடுவேமான்னு ஒரு கேள்வி கேட்டு திருவண்ணாமலை
குகை நமச்சிவாயர் குரு நமச்சிவாயர் கதை சொன்னார்கள்.
ஒரு மாடு கஷ்டப்பட்டு குட்டி போடுது நக்கி நக்கித் தருது,
பால் தருது, கவனிக்குது எல்லாம் தருது? இறுதியில் அந்தக் கன்னுக்குட்டி நமக்குச் செய்யணும்ன்னு
எதிர்
பார்க்குதா? சத்தியமா இல்லை மனிதனிடம் மட்டும் தான் அப்படி
ஒரு எதிர்பார்ப்பு உண்டுன்னு தானாப் புரிந்தது.
மாடு - கன்னுக்குட்டி இறைவன் நாமன்னு வைச்சுகிட்டா பொதுவா
இறைவனை மாடு மாதிரியும் நாம கன்னுக்குட்டியாவும் இருப்போமுல்ல மாணிக்கவாசகர் மாற்றி
யோசித்தார் இறைவன் எப்பவும் நம்மிடமேயிருப்பார்லன்னு உண்மையில் மெய் சிலிர்த்துப் போனது.
நல்ல கருத்துக்கள் அவன் அருளால் நம் காதுகளில் வந்து விழுகின்றது. இது திருவாசகப் பாடலில்
வருகிறது.
சாக்லேட், பிஸ்கட், பால்கோவா, பர்பி, மாங்காய், டீ,பொரின்னு
சாப்பிட வந்துட்டேயிருந்தது. பதிகங்களும் கேலியும், பேச்சும்
சிரிப்பும் என பயணம் தொடர நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தமும்
வந்தது.
மனம் முழுவதும் நல்ல நினைவுகளுடன் இந்த வாய்ப்பைத் தந்த எங்க
அடியார்களுக்கும், இறைவனுக்கும், உழவாரப் பணி செய்த அப்பர் பெருமானுக்கும் நன்றி கூறி
வீடு வந்து சேர்ந்தோம். இந்த உழவாரப் பணி பற்றி எழுதும் பொழுது மீண்டும் அங்கு இருந்த
நினைவு தோன்றும் பொழுது ஆஹா இறைவன் மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்துள்ளானே என சிறுபிள்ளையின்
மகிழ்ச்சியும் தோன்றுகிறது.
வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பன்னூருக்குச் சென்று
ஹனுமந்தேஸ்வரனை தரிசனம் செய்யுங்கள்.
சிவா திருச்சிற்றம்பலம்
🙏
கருத்துகள்
கருத்துரையிடுக