20220731 சுந்தரர் தேவாரம் முற்றோதல் பெங்களூரு
20220731
எங்களுடைய ஆண்ட அரசு உழவாரப்பணிக் குழு சார்பில் பெங்களூர் ஒடுக்கத்தூர் மடத்தில் சுந்தரர் தேவாரம் முற்றோதல் இன்று நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
சுந்தரர்ன்னு எனக்குத் தெரிந்தது சின்ன வயதில் சிவாஜி கணேசன் மட்டுமே, பித்தா பிறைசூடி பாடல் கூட சிவாஜி கணேசன் பாடியதுன்னு மட்டுமே சிறு பிள்ளையில் தெரியும். ஹி ஹி சிவனே சிவாஜி கணேசன் தான்னு கூட நினைச்சுருக்கேன்
நால்வர், நாயன்மார்கள் கதை எல்லாம் கேட்ட பிறகு சுந்தர் மேல் ஒரு தனி ஈர்ப்பு, ஏன்னா தோழனாகப் பார்த்தார் சிவபெருமானை, உரிமை எடுத்துப் பார் எனக் கூறக் கேட்க அட அப்படின்னு இருக்கும்.
அவருடைய பாடல்கள் எல்லாம் ஒரு பதிகம் கூட முழுசா என் வாழ்நாளில் கேட்டது கூட இல்லை.
போய் உட்கார்ந்து கேட்க ஆரம்பித்ததிலிருந்து அட அட அட என்ன பாடல்கள், என்ன ராகம், என் ஸ்பீடு, அதே சமயம் என்ன தாலாட்டு விவரிக்க வார்த்தைகளே இல்லை.
சுமார் இரண்டு வருடங்கள் கழித்து எங்க பெரிய்ய ஐயா வந்துருந்தாங்க, ஆசி பெற்று அவர்களோட இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றது இன்னுமே சந்தோஷமாக இருந்தது.
100 பதிகங்கள் சுமாரா பத்து பாட்டுன்னு வைச்சாக் கூட 1000 பாடல்கள், ஒரு நாளில் முடியுமா, ராகத்துடன், பண்ணுடன், தாளத்துடன் ஆம் முடியும், நாம் மனது வைத்தால்ன்னு முற்றோதல் முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு பதிகங்களும் அற்புதம் கேட்கக் கேட்க இனிக்குமா ஆமாம் இனிக்கிறது காது.
என்னையெல்லாம் பார்த்தவுடனே பிடிக்காது பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்ன்னு ஒரு வசனம் வருமே, அது போல் அல்ல இந்த சுந்தரர் தேவாரம்
கேட்டவுடனேயே பிடிக்கிறது. ஆஹா, ஆஹா, ஆஹா ன்னு மெய் மறந்து கை உயர்த்தி பாடத் தோன்றுகிறது.
அத்தனையும் தமிழ், எங்கே இந்த பெங்களூரில தமிழ் படிக்க முடியுது, இன்று கிட்டத்தட்ட 8 மணி நேரம் தமிழ் படித்தேன் என்றால் எம்மாம் பெரிய விஷயம்.
இந்த அனுபவத்தை எப்படிச் சொல்ல, இயலவில்லை ஏன்னா அதை அனுபவித்தால் மட்டுமே பெறலாம். காலால் நடந்து, நடந்து, ஊர் ஊராகப் போய் சுந்தரர் பாடிய பாடல்களை வாழ்நாளில் கேட்கவாவது வேண்டாமா? நீ போ என இறைவன் உந்தித் தள்ளி அனுப்பி வைத்தான் போல என்னை.
ஒவ்வொரு பதிகங்களும், ஒவ்வொரு மாதிரி, கொஞ்சமாவது அலுக்கணுமே, 100 முடித்தவுடன் கூட அந்த நினைப்பு வரவில்லை, இன்னும் அந்த பதிகங்களின் இசையிலிருந்து மீண்டு வர இயலவில்லை என்னால்.
ஓதுவாமூர்த்திகள் அத்தனை பேரும் அவ்வளவு அழகாகப் பாடினார்கள். முதல்பாடலில் எப்படி குரல் கணீர் என ஒலித்ததோ 1000வது பாடலிலும் அதே கணீர் குரல். உருக்கிட்டாங்க உருக்கி. அதிருத்ரம் போனப்ப எழுதியிருந்தேன் அங்கு வந்த ஓதுவாமூர்த்திகளும் இங்கும் வந்திருந்தார்கள். மனதை மயக்குகிறது இவர்களின் குரல்.
அடுத்து எங்க உழவாரப்பணிக் குழுவோட ஏற்பாடு அப்பப்பா பிரமாதமா இருந்தது. காலை டிபன், இடையில் டீ, பிஸ்கெட், சூப், மதியம் சாப்பாடு, மாலை டீ, பிறகு மாலை பஜ்ஜி, போண்டான்னு வீட்டுக்குப் போற வரைக்கும் எங்களுக்கு தந்து கிட்டே இருந்தாங்க.
சாதாரண விஷயமில்லை ஒரு விழாவை முன்னிற்று செய்வது என்பது அத்தனை ஓதுவா மூர்த்திகளையும் வெவ்வேறு பகுதியில் இருந்து ஒழுங்கிணைத்து அழைத்து வந்து, எல்லோரையும் திருப்திப்பட வைத்து, பக்தியில் திளைக்க வைத்து, என் போன்ற கத்துக் குட்டிகளுக்கும் தேவாரத்தை பிடிக்க வைத்து, மகிழ வைத்து மனதை ஆனந்த நடனம் புரிய வைச்சுட்டாங்க. ஏற்பாடு செய்த அனைவருக்கும், அடியார்களுக்கும் பணிவான நமஸ்காரங்கள். பாடல் கேட்டுக் கேட்டு மனது லயித்துவிட்டது.
சுந்தரமூர்த்தி நாயனார் பற்றிய சொற்பொழிவு கேட்டிருக்கிறேன். you tube ல் பெரியபுராணத்தில் பெரியவா புராணம் பாலாஜி பாகவதர் மிகப் பிரமாதமாகச் சொல்வார்.
தான் கொடுத்த சத்தியத்தை மீறி சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் சிவனைப் பார்க்கக் கிளம்புகிறார். அவரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒரு பக்தி. கிளம்பும் போது அவர் தந்த சத்தியத்தை மீறியதால் அவருக்குக் கண் தெரியவில்லை.
அப்பா உன்னைப் பார்க்கத் தானே வந்தேன். கண் இல்லை என்றால் எப்படி உன்னைப் பார்ப்பேன், என்ற துக்கத்தில் பாடுகிறார்.
அப்பனே ஒரு தண்ணீரில் தூசி விழுந்தால் அதைக் கொட்டி விடுவோம், அதே தூசி பாலில் விழுந்தால் அந்த தூசியை எடுத்து விட்டு பாலை உபயோகிப்போம் தானே, அது போல நான் தவறு செய்து விட்டேன், என் தவற்றை அந்தத் தூசியைப் போல தூக்கி எறிந்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்னை மன்னிக்கக் கூடாதா? கண் தெரியாவிட்டால் என்ன? என் கைகளால் தடவி உன் பாதத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன் என் ஐயனேன்னு தொடர்ந்து உருகுகிறார்.
அவர் திருவாரூர் போகும் வரை வழியிலிருக்கும் ஒவ்வொரு ஊராகச் சென்று பாடி வேண்டுகிறார். எல்லாமே உருக்கம் தான், உரிமை தான். காஞ்சிபுரத்தில் வந்து அம்மாவிடம் வேண்டுகிறார், இடப்பாகம் அம்பாளோடது அதனால் அம்பாள் மனமிறங்கி அவருக்கு ஒரு கண்ணின் பார்வையை
காஞ்சியில் தந்து விடுகிறாள்.
இந்தக் கதை தெரியுமே தவிர பதிகங்கள் படித்ததில்லை இன்று அந்தப் பதிகங்களையெல்லாம் படிக்க ஒரு வாய்ப்பை இறைவன் தந்தார். எப்பொழுதும் சொல்வது போல் மனமார்ந்த நன்றி இறைவா.
இன்று கூடவே என் கணவரும், சித்தப்பாவும் வந்து பதிகங்கள் பாடினார்கள்.அவர்களுக்கும் நன்றி. இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக